Thursday, 13 September 2012

வீடு வரை உறவு, வீதி வரை மனைவி, காடு வரை பிள்ளை, கடைசி வரை யாரோ..

பண்டைய உலகின் பெருமளவு நிலபரப்பை வென்று மாபெரும் வெற்றி வீரராகத் திகழ்ந்தவர் மகா அலெக்சாந்தர் இவர் மாசிடோனியாவின் தலைநகராகிய பெல்லாவில் கி.மு. 356 ஆம் ஆண்டில் பிறந்தார்.அலெக்சாந்தர் வரலாற்றில் மிகவும் வியக்கத்தக்க மனிதராக விளங்கினார். அவருடைய வாழ்வும், ஆளுமையும் கவர்ச்சிமிக்கதாக இருந்தது. அவருடைய வரலாறை வாசிக்கும் போது அவருடைய வாழ்வில் நடந்த ஒவ்வொரு நிகழ்ச்சியும்கூட வியப்புக்குரியதாகவே இருக்கும். 

மேலும் அவருடைய பெயரால் எத்தனையோ கட்டுக் கதைகள் புனையப் பெற்றன. வரலாற்றிலேயே தலைசிறந்த போர் வீரனாக விளங்கிய அவர் மாபெரும் வெற்றி வீரன் பட்டத்திற்கு அவர் முற்றிலும் தகுதியுடையவராகத் திகழ்ந்தார். தனிப்பட்ட போர் வீரன் என்ற முறையில் அலெக்சாந்தர், திறமை அஞ்சா நெஞ்சம் ஆகிய இரண்டின் ஒருங்கிணைந்த உருவமாக விளங்கினார். தளபதி என்ற முறையில் அவர் ஒப்பற்றவராகத் திகழ்ந்தார்.

பதினொராண்டுகள் அவர் போரில் ஈடுபட்டிருந்தார். ஆனால், ஒரு போரில்கூட அவர் தோல்வி கண்டதில்லை.இவ்வாறு வெற்றி மகுடத்தையே சூடிக்கொண்ட மாவீரன் அலெக்ஸாண்டரால் மரணத்தை வெற்றி கொள்ளமுடியவில்லை அவ்மாவீரன் தனது 32 வது வயதில் மரணதேவனிடம் தோல்வியை தழுவிக்கொண்டார். 

 தான் படையெடுத்த எல்லா நாடுகளையும் கைப்பற்றி விட்டு தாய்நாடு திரும்பும் வழியில் நோய்வாய்ப்பட்டார். பல மாதங்கள் ஆகியும் அவருக்கு அந்த நோய் தீரவில்லை. சாவு தன்னை நெருங்குவதை உணர்ந்தார் அவர்.ஒருநாள் தன்னுடைய தளபதிகளை அழைத்து,"என்னுடைய சாவு நெருங்கி விட்டது.எனக்கு மூன்று ஆசைகள் உள்ளன. அவற்றை நீங்கள் கண்டிப்பாக நிறைவேற்றி வைக்க வேண்டும்" என்று கேட்டுக்கொண்டார்.

 அவர்களும் அவற்றை நிறைவேற்றுவதாக உறுதியளித்தனர். அதன்பின் தனது விருப்பங்களை கூறினார். 

 முதல் விருப்பமாக, "என்னுடைய சவப்பெட்டியை எனக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள் மட்டுமே தூக்கி வர வேண்டும்." 

 இரண்டாவது, "என்னைப் புதைக்கும் இடத்திற்குச் செல்லும் வழியானது நான் சம்பாதித்து வைத்த,விலைமதிப்பற்ற கற்களால் அலங்காரம் செய்யப்பட வேண்டும்". 

 மூன்றாவதாக, "என் கைகள் இரண்டையும சவப்பெட்டிக்கு வெளியில் தெரியுமாறு வைக்க வேண்டும்". இவைதான் எனது மூன்று ஆசைகள் என்று குறிப்பிட்டார்.

இதனை கேட்டுக்கொண்டிருந்த தளபதிகளுக்கு இந்த ஆசைகள் வித்தியாசமாகத் தெரிந்தன.என்ன காரணமாக இருக்கும் என்று கேட்கப் பயந்தார்கள்.ஆனால் ஒரு தளபதி தைரியமாக முன்வந்து, "அரசே! நாங்கள் தங்கள் ஆசையைக் கண்டிப்பாக நிறைவேற்றுவோம். ஆனால், இதற்கான காரணத்தை அறிய நாங்கள் ஆவலாகவுள்ளோம் தாங்கள் எங்களுக்கு விளக்க முடியுமா " என்று கேட்டான், 

அலெக்ஸாண்டர் அதற்கு விளக்கமளித்தார். 

"என்னுடைய சவப்பெட்டியை மருத்துவர்கள் தூக்கிச் செல்வதால், உலகில் உள்ள எல்லோரும் ஒரு விடயத்தை அறிந்து கொள்வார்கள். மருத்துவர்களால் எந்தவொரு நோயிலிருந்தும் ஒரு உயிரை நிரந்தரமாகக் காப்பாற்ற முடியாது என்பதை உலகிற்கு காட்டவும் .மரணத்தை எவராலும் நிறுத்த முடியாது.மரணம் ஒரு நிதர்சனமான உண்மை என்பதை புரிய வைக்கவும். 


 "வாழ்க்கையில் எவ்வளவு பணமும், பொருள், பிற செல்வங்களை சம்பாதித்தாலும், அவற்றை யாரும் தன்னுடன் எடுத்துச் செல்ல முடியாது. அது சவக்குழி வரை மட்டும்தான்.மனிதர்கள் வீணாக சொத்துக்கள்,செல்வங்கள் போன்றவற்றின் பின்னால் செல்ல வேண்டாம் என்பதைத் தெரியப்படுத்துவதற்காக". 

"இவ் உலகையே வென்றவன் இந்த மாவீரன் அலெக்ஸாண்டர்,சாகும்போது கைகளில் ஒன்றுமில்லாதவனாகத்தான் இருக்கிறான் என்று அறிந்து கொள்வதற்காகவே" என்றாராம். 

 ஆம் நாமும் அப்படித்தான் நம்ம வாழ்க்கையை தற்போது வாழ்ந்து வருகின்றோம். நம் வாழ்க்கையே எப்போதும் பணம்,பணம்,பணம்தான்.சதா நாம் அனைவரும் அதன் பின்னால் ஓடிக் கொண்டே இருக்கின்றோம். 

மாவீரன் அலெக்ஸ்சன்டரின் கருத்துக்களை பாடல் வரியாக அமைத்தரோ கவியரசு கண்ணதாசன்.

வீடு வரை உறவு, வீதி வரை மனைவி, 
காடு வரை பிள்ளை, கடைசி வரை யாரோ..