Thursday 10 November 2016

தமிழர்களை சத்தமில்லாமல் அழிக்கும் புதிய அரசு

ஆயுதப் போராட்டம் இடம்பெற்ற காலங்களில் வட பகுதியில் இல்லாத பல சமூக விரோத செயல்கள் இன்று விஸ்வரூபம் எடுத்துள்ளது குறிப்பாக போதைப் பொருள் பாவனை,விபச்சாரம் போன்றவற்றின் கேந்திர நிலையமாக உருவாகியிருப்பது குறித்து கவலை கொள்ளாதவர் எவரும் இருக்க முடியாது ,இன்றைய நிலைக்கு முற்று முழுதாக இலங்கை அரசுதான் காரணம் என்பதற்கு மாற்றுக்கருத்து இருக்க முடியாது. இவ் அழிவில் இருந்து எதிர்கால சந்ததியை காக்க  தமிழ் மக்களும், தமிழர் அரசியல் தரப்பும் உணர்ந்து செயற்பட  வேண்டும்.

வடக்கில் இன்றும் 1 இலட்சத்து 50 ஆயிரம் சிங்கள இராணுவம் கடமையில்
ஈடுபட்டுள்ளதுடன், அவர்களுக்கு மேலதிகமாக கடற்படை, விமானப்படை மற்றும் வலம் வரும் நிலையில், கடல் வழியாக கஞ்சா வட பகுதிக்கு எவ்வாறு எடுத்து வரப்படுகின்றது என வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் கேள்வி எழுப்பியிருக்கிறார்.மேலும் போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களை கரையேற்றுவது எவ்வாறு என விழித்துக் கொண்டிருக்கும் வேளைகளில் வாள்வீச்சு, போதைப் பொருள் பாவனை மக்களிடையே அதிகளவில் பரவிவருவது மிகுந்த குழப்பத்தை உண்டுபண்ணுவதாக அமைந்துள்ளது.

வட பகுதியில் தொடர்ந்தும் காணப்படும் இறுக்கமான பாதுகாப்பு அரணையும் தாண்டிப் போதைப் பொருட்கள் எடுத்துவரப்படுகின்றது எனின் இதில் சிங்கள அரசின் சதித்திட்டம் உள்ளடங்கி இருப்பதை எவரும் இலகுவாக விளங்கிக்கொள்ள முடியும். தமிழ் பிரதேசத்தை மையப்படுத்தி மேற்கொள்ளப்படும் இந்நடவடிக்கை அடுத்த தலைமுறையை சுயசிந்தனை இல்லாத, ஆற்றலற்ற, விடுதலை உணர்வில்லாத ஒருதலைமுறையாக உருவாக்குவதையே சிங்கள அரசு செய்து கொண்டிருக்கிறது.

போர் நடைபெற்ற காலத்தில்கூட போதைப் பொருள் பாவனையோ,கலாச்சார சீரழிவோ இருந்ததில்லை.பலம் பொருந்திய புலிகளை அழித்தவர்களுக்கு இந்த சிறிய விடையத்தை தடுத்து நிறுத்தத்  தெரியாமல் இல்லை. முதலமைச்சர் விக்னேஸ்வரன் சொல்வதைப் போன்று வடக்கில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான இராணுவத்தினர் கடமையில் இருந்தும் இவ்வளவு போதைபோருளும் , வாள் வெட்டுக் குழுக்களும் எங்கிருந்து வருகின்றன? எவ்வாறு செயற்படுகின்றன என்பது குறித்து சிந்திப்பது அவ்வளவு பெரிய விடையமல்ல.

இலங்கை அரசாங்கம் எதை நினைக்கிறதோ அதையே திட்டமிட்ட வகையில் செயற்படுத்திவருகின்றது.மூன்று சாகப்தங்களாகபோரினால் பாதிக்கப்பட்டு எமது உயிர்களையும் சொத்துக்களையும் எதிர்கால வாழ்வினையும்தொலைத்துவிட்டு, அந்தச் சரிவில் இருந்து மெதுவாக எழுந்து நிற்க முன்னர், வடக்கில் இன்று நிகழ்த்தப்படும் திட்டமிட்ட இனச் சுத்திகரிப்பு நடவடிக்கைகளால் நெஞ்சம் நெக்குருகிப்போகின்றது. உண்மையில் சிங்கள அரசின் உண்மையான நோக்கம் ஒன்றே ஒன்று தான். தமிழ் மக்களை எப்பாடுபட்டேனும் அடக்கிவிடவேண்டும். அவர்களின் அடுத்த தலைமுறையினர் திசை மாறிச் செல்ல வேண்டும். அவர்களும் சுயநிர்ணயம், சுயாட்சி, அதிகாரம், தீர்வு என்று உரிமைக் குரல் எழுப்பக் கூடாது.

இதை இன்றைய அரசாங்கம்மட்டுமல்ல, ஆட்சிப் பீடம் ஏறிய அத்தனை அரசாங்கங்களும், ஆட்சியாளர்களும் செய்துதான். இது மைத்திரி. ரணில் அரசாங்கத்தின் புதிய உத்தியல்ல. முன்னைய அரசாங்கங்கள் பள்ளிக்கூடங்கள், ஏனைய கல்வி நிறுவனங்களை அழித்தன. இன்றைய அரசாங்கமும்  மாணவர்களையும், இளைஞர்களையும் அழிக்க, சிதைக்க தலைப்பட்டு இருக்கிறது.

இலங்கையில் மகிந்த ஆட்சியை ஒழித்து, மைத்திரி ஆட்சியைக் கொண்டு வருவதற்கு வேண்டுமானால் தமிழ் மக்கள்உதவிபுரிந்திருக்கலாம். அதற்கு நன்றி விசுவாசமாக இவர்கள் தமிழ் மக்களுக்கு அதிகாரங்களை வழங்க முயற்சிப்பார்கள் என்று எதிர் பார்ப்பது அடி முட்டாள்த்தனமே.

சர்வதேச அழுத்தங்களை இலங்கை அரசாங்கங்கள் சமாளிக்கவே முயற்சிக்கின்றது. இந்தச் சந்தர்ப்பத்தில் தமிழர்களுக்கு சுதந்திரம், ஒரு தடை அல்ல எனக்  காட்டிக்கொள்ளும் அரசு, அந்தஇடைவெளியிலும் தமிழர்கள் நிதான நிலைக்கு வரக்கூடாது என்பதில் விடாப்பிடியாகஇருக்கிறது. இன்றைய ஜனாதிபதி எளிமையானவராக தெரியலாம். அவர், சாதாரணமானவர்களைப் போன்று செயற்படலாம். ஆனால் அவரும் முன்னைய அரசாங்கங்களின் தலைவர்களைப் போன்ற மனநிலையை கொண்டவரே. உண்மையில் இவ் அரசாங்கமானது  தமிழர்களை இன்னொரு விதத்தில் அழித்துக்கொண்டுவருகின்றது. அது சத்தமில்லாமல்  நடத்தப்படுகின்றது.

தமிழரையும் ,தமிழரது நிலம், கலாச்சாரங்களையும் அடக்கி , அழிக்க கங்கணம் கட்டி நிற்கும்  தீய சக்திகளிடம் இருந்து   நமது தமிழீழ தாயக பூமியானது காக்கப்பட வேண்டும். இன்றைய நிலையில் சர்வதேச அமைப்புகளுக்கு முறையான அழுத்தங்களை கொடுப்பதே சிறந்த வழியாகவுள்ளது. மேலும் தாயகத்தில் உள்ள தமிழ் தமிழ்த்தலைமைகள் பதவி  மோகத்தில் மௌனமாக இருக்காது  எதிர்கால சந்ததியை கருத்தில் கொண்டு செயற்பட வேண்டும், இல்லையேல் இவர்களை எதிர்காலம் ஒருபோதும் மன்னிக்காது..