Wednesday, 19 September 2012

சிங்கள அரசுக்கெதிரான புதிய யுத்தம்

ஏறக்குறைய மூன்று தசாப்த காலமாக இலங்கை இனவெறி சிங்கள ஆட்சியாளர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வந்த ஆயுதப்போரட்டமானது பல நாடுகளின் ஆளணி மற்றும் ஆயுதபல உதவியுடன் 2009 ஆம் ஆண்டு பல்லாயிரம் அப்பாவி பொதுமக்களின் உயிர்களைப் பலியெடுத்து முடிவுக்குக் கொண்டுவரபட்டது.

விடுதலைப் புலிகளால் தாயக பிரதேசத்தில் இருந்து சிங்கள இனவெறி இராணுவத்தை விரட்டியடிக்க நடத்தப்பட்ட தாக்குதல்களின் போதெல்லாம் ஆட்சியில் இருக்கும் இனவாத அரசானது தனது பதில் தாக்குதல்களை அப்பாவிப் பொதுமக்களை நோக்கி திருப்பிவிடுவதையே தனது போர் தர்மமாக கொண்டிருந்தது.1983 ஜூலை 23 ஆம் திகதி விடுதலை புலிகள் தாய்மண்ணில் இருந்த இராணுவத்திற்கு எதிரான முதல் தாக்குதலை தொடுத்திருந்தனர். இதனைத் தொடர்ந்து தமிழ் மக்களுக்கு எதிரான கலவரங்களும் வன்முறைகளும் நாடு முழுவதும் கட்டவிழ்த்து விடப்பட்டன,இக் கலவரத்தின் போது உயிருடன் எரிக்கப்பட்டும் சித்திரவதை செய்யப்பட்டும் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டும் 3000 இற்கும் மேற்பட்ட அப்பாவிப் பொதுமக்கள் அநியாயமாக கொல்லப்பட்டதுடன்,பல கோடி பெறுமதியான சொத்துக்கள் சூறையாடப்பட்டன ,ஒன்றரை இலட்சம் மக்கள் வீடுகள் இன்றி ஏதிலிகளாக்கப்பட்டு வீதியில் துக்கி வீசப்பட்டனர்.இதனைத் தொடர்ந்து ஆயுதப்போராட்டம் உக்கிரம் பெற்றதுடன்
சிறு குழுவாக ஆரம்பிக்கப்பட்ட விடுதலை இயக்கம் ஒரு மரபு ரீதியான இராணுவமாக கட்டியெழுப்பப்பட்டது மட்டுமன்றி ஒரு தனி நாட்டை நிர்வகிக்கத் தேவையான அனைத்து அம்சங்களும் உள்ளடங்கியதான ஒரு சிறந்த கட்டமைப்பொன்றை விடுதலைப் புலிகள் இயக்கம் நிறுவியிருந்தது என்பதே உண்மையாகும்.


தமிழர்களின் ஆயுதப்போராட்டம் வலுப்பெற்றதைத்தொடர்ந்து சிங்கள ஆட்சியாளர்கள் ஆட்சிபீடமேறுவதற்கும், தமது ஆட்சியை தக்கவைப்பதற்கும் இனப்பிரச்சனையை ஒரு கருவியாக காலத்துக்கு காலம் பயன்படுத்திக்கொண்டனரே தவிர உண்மைத் தன்மையுடன் எந்த சிங்கள ஆட்சியாளரும் நடந்துகொள்ளவில்லை.போர் நிறுத்தங்கள் பேச்சுவார்த்தைகள் என்ற போர்வையில் விடுதலைப் போரை பலவீனபடுத்தவும்,விடுதலைப் புலிகளை ஒரு பயங்கரவாத அமைப்பாக காட்டிக்கொள்ளவும் இக்காலங்களை பயன்படுத்திக்கொண்டதுடன் இனப்பிரச்சனையை தீர்த்து வைப்பதற்க்கான எந்தவித ஆக்கபூர்வமான திட்டங்களையும் கொண்டிருக்கவில்லை.விடுதலைப் புலிகளுக்கு பயங்கரவாதிகள் என்ற முகமூடியைப் போட்டதுடன் சர்வதேச நாடுகளில் புலிகளுக்கு தடையினை ஏற்படுத்த தன்னாலான முழுமுயற்சியையும் மேற்கொண்டது. ஜனநாயக முறையில் தெரிவு செய்யப்பட்ட அரசு என்ற வகையில் பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் என்றும் பயங்கரவதத்தின் பிடிக்குள் அகப்பட்டுக்கொண்ட மக்களை மீட்பதற்க்கான "மனிதாபிமான நடவடிக்கை" என்றும் கூறிக்கொண்டு வெளிநாடுகளில் இருந்து பெற்றுக்கொண்ட அதி நவீன ஆயுதங்கள் மற்றும் தடை செய்யப்பட்ட இரசாயன ஆயுதங்கள் மூலம் அப்பாவித் தமிழ் மக்களை கொன்று புதைத்தது.


1956 ஆம் ஆண்டிலிருந்து இலங்கையில் தமிழ் இனம் சிந்திய இரத்தம்,இழந்த உயிர்கள்,உடமைகள் எண்ணில் அடங்காது,இவை எல்லாவற்றையும் விஞ்சியதாக 2005 ஆம் ஆண்டு  ஆட்சிபீடமேறிய ராஜபக்சவினதும் அவரினது சகோதரர்களாலும் 2009 ஆம் ஆண்டில் அரங்கேற்றிய  தமிழின அழிப்பே உச்சக்கட்டத்தைத் தொட்டுள்ளது. பெருந்தொகையான மக்களை ஒரு குறுகிய நிலப்பரப்பினுள்  சிங்கள அரக்க இராணுவம் இரும்புக்கரம் கொண்டு அடைத்தது,அத்தியவசியப் பொருட்கள் மக்களைச்  சென்றடயாதவாறு தடுத்தது,காயமடைந்த மக்களுக்கு  மருந்துவ உதவிகள் சென்றடையாதவாறு  செஞ்சிலுவைச் சங்க கப்பல் மீது  கனரக ஆயுதங்கள் மற்றும் செல் தாக்குதல்களை மேற்கொண்டது ."யுத்த தவிர்ப்பு வலயம்" என்று அறிவித்து அதனுள் தஞ்சமடைந்த மக்கள் மீது குண்டுகளைப் போட்டு கொன்றது. யுத்த தர்மங்களையெல்லாம் மீறி அரச பயங்கரவாதமானது  அப்பாவிப் பொதுமக்களை கொலை செய்ததை   சர்வதேச சமூகமும்,ஐக்கிய நாடுகள் சபையும் செய்மதிகள் ஊடாக கண்காணித்துக்கொண்டிருந்தனவே தவிர  அவர்கள் உடனடியாக பொதுமக்களைப்  பாதுகாக்கும் ஆக்கபூர்வமான நடவடிக்கையினை மேற்கொள்ளவில்லை என்பதே பெரும் மனவருத்தம்தரும் விடயமாகும். இவ்வாறு யுத்த தர்மங்களை எல்லாம் மீறி குழந்தைகள்,சிறுவர்கள்,பெண்கள், கர்ப்பிணிகள்,வயோதிபர்கள் என்ற வேறுபாடின்றி மிகவும் கொடூரமாக கொன்று புதைத்தது , இறுதியில் தஞ்சமடைந்தவர்களை பாலியல் வல்லுறவு மற்றும் சித்திரவதை செய்து உயிருடன் புதைத்தது.இவ்வாறு ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட அப்பாவி மக்களையும், விடுதலைப் போராளிகளையும் கொன்று   பயங்கரவாதத்திற்கெதிரான யுத்தத்தினை முடிவுக்குக் கொண்டு வந்ததாக உலகிற்கு 18 மே 2009 இல்  அறிவித்து வெற்றிவாகை சூடியது மஹிந்த ராஜபக்ச அரசும் அதன் இராணுவமும்.

இன அழிப்பு யுத்தம் முடிந்து 3 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும் இன்றும் தமிழ் மக்கள் சுதந்திரக்காற்றை சுவாசிக்க முடியாதவாறு கைதிகளாக வாழும் நிலையே காணப்படுகிறது.அரக்க குணம் கொண்ட சிங்கள அரசினதும் ,அதன் இராணுவதினதும்  கொடுமைகள் தமிழ் மக்களை பின் தொடர்ந்தவண்ணமே உள்ளது.தடுப்பு முகாமில் இருந்து விசாரணைக்கென அழைத்துச் செல்லப்பட்டவர்கள் இன்னமும் விடுவிக்கப்படவில்லை,கோத்தபாயவின் கீழ் இயங்கும் இரகசிய குழுவினால் கைதுசெய்யபட்டார்கள் என கருதப்படும் பல நூற்றுக்கணக்கானவர்களின் விபரம் மறைக்கப்பட்டுள்ளது,சொந்த இடங்களில் மீள் குடியமரத்தப்பட்டவர்களின் நிலையும் மாறவில்லை பெண்கள் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளக்கப்படுகிறார்கள், கைதுகள், காணமல் போதல், அச்சுறுத்தல்கள், சித்திரவதைகள் முடிவின்றி தொடர்கின்றது. மேலும் அபிவிருத்தி என்ற போர்வையில் வீதிகளுக்கு சிங்களப் பெயர்களை சூட்டுவதும்,தமிழர்களின் சொந்த மண்ணில் குடியேற்றங்களை மேற்கொள்வதும்,தமிழர் பிரதேசத்தில் உள்ள அரச திணைக்களங்களில் கீழ் நிலை பணியாளர்களில் இருந்து நிர்வாக தர உத்தியோகத்தர்கள்வரை சிங்களவர்களை நியமிக்கும் பணிகள் என்பன திட்டமிட்டு அதிவேகமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. உண்மையில் சிங்கள அரசுக்கு தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு தொடர்பாக எந்த அக்கறையும் கிடையாது, எம்மை பலவீனப்படுத்தி அடிமையாக வைத்திருக்கவே விரும்புகிறது.2008 ஆம் ஆண்டின் மாவீரர்தின உரையில் தேசியத்தலைவர் குறிப்பிட்டிருந்த முக்கியமான விடயம் "புலிகளை தோற்கடித்த பின்னர்தான் தமது தீர்வுத்திட்டத்தை அறிவிப்போம் எனக்கூறிக்கொண்டு போரை நடத்துகிறது ,தமிழரின் உண்மையான பிரதிநிதிகளை, அவர்களது பேரம்பேசும் சக்தியை அழித்துவிட்டு எப்படி சிங்களம் தீர்வை முன்வைக்கப்போகிறது" என்று.உண்மையில் எமக்கு இன்று அரசியல் தீர்வுமில்லை,அச்சமின்றிய வாழ்வுமில்லை.இவ்வாறான அவலநிலை தொடருமானால் சிங்கள அரசுக்கெதிரான யுத்தமொன்று புதிய வழியில் தோற்றம் பெறுவதை யாராலும் தடுக்கமுடியாது.