Thursday 23 March 2017

தாமதமான நீதி மறுக்கப்பட்ட நீதிக்கு சமம்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தீர்மானங்களை நடைமுறைப்படுத்த இலங்கை அரசாங்கத்துக்கு மேலும் இரண்டு ஆண்டு  கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இக்கால அவகாசத்தால் இலங்கை அரசு மகிழ்வடைந்துள்ளது. இம் மகிழ்வுக்குக் காரணம் இரண்டு வருட கால அவகாசத்தில் ஐக்கிய நாடுகள் பேரவையின் தீர்மானங்களை நிறைவு செய்துவிடுவோம்   என்பதர்க்கல்ல. மாறாக UN தீர்மானங்களை அமுல்படுத்துவதற்காக வழங்கப்பட்ட இக்கால அவகாசத்தை, அத்தீர்மானங்களை பெறுமதியற்றதாக, வலுவற்றதாக, தேவையற்றதாக மாற்றுவதற்குப் பெருந்துணை புரியும் என்பதாலேயாகும்.

UN மனித உரிமைகள் ஆணையத்தின் கூட்டத்தொடரில் வைத்து
இலங்கை அரசுக்கு கால அவகாசம் வழங்கப்படும்போது இணை அனுசரணை என்ற அடிப்படையில், வாக்கெடுப்பு என்பதும் கைவிடப்பட்டது.

எதுவாயினும் 2014 மற்றும் 2015ம் ஆண்டுகளில் இலங்கை விவகாரம் தொடர்பில் UN மனித உரிமைகள் பேரவையால் ஆராயப்பட்ட போது  இருந்த முனைப்பு, ஆர்வம், ஈடுபாடு என்பன 2017ம் ஆண்டில் இருக்கவில்லை என்பதை அவதானிக்க முடியும். காலம் செல்லச்செல்ல குறித்த விடயம் ஆர்வம் குறைந்தோ அல்லது மறக்கப்பட்டுபோவது வழமை, அந்த வழமை எங்கள் விடயத்திலும் நடந்துள்ளதென்பதே உண்மை.

இப்போது கால அவகாசம் குறித்துப் பேசுகின்றவர்களும் இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் இதே கரிசனையோடு பேசுவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. இரண்டு வருடங்களின் பின்னர் எந்த விடயம் முதன்மையாக இருக்கிறதோ அதன் பக்கமே உலகத்தின் பார்வை இருக்கும்.

இதனால்தான் "ஆறின கஞ்சி பழங்கஞ்சி" என்றொரு பழமொழி நம் தமிழ் மொழியில் வந்தது. எனினும் இவற்றை நம் அரசியல் தலைமை இம்மியும் சிந்திக்கவில்லை. அதற்கும் காரணம் உண்டு.

அதாவது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைக்கும் தற்போதைய ஆட்சியாளர்களுக்கும் இடையில் மிக நெருக்கமான உறவு உண்டு. இதனடிப்படையில் கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துவதில் கூட்டமைப்பின் தலைமை மிகவும் உறுதியாக, இறுக்கமாக நின்றது.நாங்கள் சொல்வது தான் தமிழ் மக்கள் சொல்வது, தமிழ் மக்கள் சொல்வதுதான் நாங்கள் சொல்வது என்றவாறு கூட்டமைப்பின் தலைமை கூறி வருகிறது.

ஆனால் கால அவகாசம் என்ற விடயத்தில், போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் கருத்தை கண்டறிந்து அதன்படியே UN மனித உரிமை ஆணையம் தீர்மானத்தை எடுத்திருக்க வேண்டும். குற்றம் இழைத்த தரப்பு கால அவகாசம் கேட்கிறது. அக் கால அவகாசத்தைக் கொடுப்பதா? இல்லையா? என்பதைத் தீர்மானிப்பதற்கு, பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் அபிப்பிராயத்தைக் கேட்பது நீதியல்லவா?

இருந்தும் மனித உரிமைகள் பேரவை கூட ஈழத் தமிழ் மக்களின் விடயத்தில் ஏனோ தானோ என்று நடந்து வருகிறது என்பதே உண்மை.

எது எவ்வாறாயினும் போரினால் பாதிக்கப் பட்ட தமிழ் மக்களின் மனநிலையை அறியாமல் இலங்கை அரசுக்கு இரண்டு வருட கால அவகாசம் வழங்குவதென்பது, இதுதான் உலகம் என்ற மகா தத்துவத்தை உணர வைத்துள்ளது. அவ்வளவுதான்.