Thursday, 13 September 2012

எப்போது ஆட்கடத்தல்,கப்பம் பெறுதல்,படுகொலைகள் இலங்கையில் முடிவுக்கு வரும் ???

இலங்கை  ஜனாதிபதியின்  சகோதரனும் அரசு பாதுகாப்பு செயலாளருமான கோத்தபாயவினால்  உள்நாட்டில் மட்டுமன்றி சர்வதேச ரீதியிலும் நடாத்திவரும் ஆட்கடத்தல் நடவடிக்கையானது   பலதடவைகள் ஆதாரத்துடன்  ஊடகங்கள் மற்றும் அமைப்புக்கள் மூலம் வெளிச்சத்திற்கு வந்துகொண்டே உள்ளது ஆனால்  அதனை தடுத்து நிறுத்துவதற்கான  ஆக்கபூர்வமான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இது தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபை இலங்கை  அரசுக்கு அழுத்தம் கொடுத்து உரிய விசாரணைகளை மேற்கொள்வதுடன் இவ்வாறான ஆட்கடத்தல்கள்,முறையற்ற  கைதுகள், பெண்கள் மீதான வன்முறைகள் மற்றும் கொலைகள்   எதிர்காலத்தில் இடம்பெறாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க   வேண்டும் என்று ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் 9ஆம் திகதி முற்போக்கு சோஷலிச கட்சியின் தலைவர்  கோத்தபாய ராஜபக்சவின் கீழ் இயங்கும் சிறப்பு ஆட்கடத்தல் பிரிவினரால் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து  ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம் பிள்ளையிடம் ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு இந்தக் கோரிக்கையை முன்வைத்தது.

சர்வதேசத்தின் அழுத்தத்தின் மத்தியிலும் இவ்வாறான பல ஆட்கடத்தல்கள், காணமல் போதல், கப்பம் பெறுதல்,சித்திரவதைகள் ,கொலைகள், பாலியல் கொடுமைகள் என்பன நாளாந்தம் அரசின், அரச படைகளின்  ஆதரவுடன்  அரங்கேறிய வண்ணமே உள்ளது. இவற்றில் வெளிச்சத்திற்கு வருபவை ஒருசிலவே. பெரும்பான்மை இனத்தவருக்கோ அல்லது அரசியல் பலத்துடன் இருப்பவர்களுக்கோ இவ்வாறான சம்பவங்கள் நிகழும்போது தற்காலிகமாக தப்பித்துக்கொள்ள வாய்ப்பிருந்தாலும் இவர்களின் பழிவாங்கல்கள் அவர்களின் எல்லைக்குள் இருக்கும்வரை மீண்டும் மீண்டும் தொடரும், இதற்கு உதாரணமாக முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகாவின் நிலையை குறிபிடலாம்.இது இவ்வாறிருக்க அப்பாவி தமிழ் மக்களின் நிலமை எவ்வாறு இருக்கும் என்பதை சர்வதேசம் புரிந்து கொள்ளவேண்டும்.

உள்ளூர் பத்திரிகைகளின் அடிப்படையில் பார்க்கும்போது முதல் அரையாண்டில் நடந்துள்ள ஆள்கடத்தல்கள் கானமல்போதல்களின்  எண்ணிக்கை 60 தைத் தொட்டுள்ளதை காணலாம். கோத்தபாயவின் கீழ் இயங்கும் விசேட பயிற்சி பெற்ற ஆட்கடத்தல் பிரிவினால் கைது செய்யபடுவோரில் பெரும்பாலானோர்  வீடு திரும்பி வந்ததாக வரலாறே இல்லை அதாவது இவர்களுக்கான நீதிமன்றம், நீதிபதி, விசாரணை , தீர்ப்பு எல்லாமே இவர்களே மேற்கொள்வார்கள் இறுதியில் திரும்பமுடியாத தூரத்துக்கு அனுபிவிடுவதுதன் இவர்களின் வேலை. 2006 ஆம் ஆண்டின் பின் நடந்த இன்றும் நடந்து கொண்டிருக்கும் இவ்வாறான சம்பவங்கள் அனைத்துக்கும்  மஹிந்த  ராஜபக்சவும் அவரின் சகோதரர்களுமே முழுப்  பொறுப்பு.

மஹிந்த ராஜபக்க்ஷ குடும்பம் ஆட்சியில் இருக்கும்வரை நீதிக்கு புறம்பான கைதுகள், ஆள்கடத்தல்கள்,   கொலைகள் மற்றும் பெண்கள் மீதான வன்முறைகள்  தொடர்ந்தவண்ணமே இருக்கும் என்பதுடன் இதுதொடர்பாக மேற்கொள்ளபடும் எந்தவொரு  உள்நாட்டு  விசாரணைகள்   எதுவும் நம்பகத்தன்மையுடன்   இடம்பெறும் என்று சற்றும் எதிர்பார்க்க முடியாது. இவர்களது குடும்ப ஆட்சியானது ஊழல் நிறைந்ததாக இருக்கும்போது எவ்வாறு இவர்களினால் அமைக்கபடும் விசாரணைக் குழுக்கள் நீதியாக இயங்கும் என எதிர்பார்க்க முடியும் ?

மஹிந்த ராஜபக்க்ஷவின் சர்வதிகார ஆட்சி முடிவுக்கு கொண்டுவரப்பட்டு சர்வதேச நீதிமன்றத்தில் இவர்களை நிறுத்துவதன் மூலமே ஆட்கடத்தல், கப்பம் பெறுதல், படுகொலைகள் இலங்கையில் முடிவுக்கு வரும் என்பதுடன் மக்களின் உணர்வுகள், உரிமைகளுக்கு மதிப்பளிக்கக் கூடிய மனிதநேயத்துடன் கூடிய  ஒரு அரசு அமைந்து  தமிழ் மக்களுக்கான உரிமைகள் வளங்கபடுவதன் மூலமே நாட்டில் நிரந்தர அமைதி ஏற்பட முடியுமே தவிர உரிமைக்காக போராடுபவர்களை அடக்குவதன்  மூலம் ஒருபோதும் நாட்டில் அமைதி ஏற்படாது என்பதை  ஆட்சியாளர்கள் நன்கு உணர்ந்துகொள்ளவேண்டும்..