நாட்டில் அரங்கேற்றப்படும் மதகுருக்களின் அட்டகாசங்களும் நல்லாட்சியின் அரசியல் தந்திரோபாயம் என்பதில் சந்தேகம் இல்லை. பொதுபலசேனா போன்ற அமைப்புகளுடன் இணைந்தும் இத்தகைய ஆர்ப்பாட்டங்கள் பல அரங்கேற்றப்படுகின்றன. இந்த நாடகங்கள் இனிவரும் காலங்களில் இன்னும் அதிகரிக்கப்படும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. போலி தீர்வொன்றை தமிழ் மக்களுக்கு திணித்து சர்வதேசத்தின் கண்களில் இருந்து தப்பிப்பதற்கு முன்னரே போடப்பட்ட அட்டவணைப்படி அரங்கேற்றப்படுகிறது.
உண்மையில் அவர்கள் புத்த பிக்குகளே அல்ல. புத்தனின் போதனையைப் பின்பற்றும் ஒரு பெளத்த துறவி மண்ணுயிர் எதற்கும் தீங்கு செய்யார். ஆனால் இவர்கள் அவ்வாறனவர்கள் அல்ல. இவையெல்லாம் மத போதனைக்கு எதிரானவை. புத்த பிக்கு ஒருவர் பொது பல சேனா என்ற அமைப்புக்கு பொதுச் செயலாளராக இருப்பதே புத்தனின் போதனைக்கு எதிரானது. இத்தகையவர்களை புத்த பிக்குகள் என்று யாரும் பார்த்துவிடக்கூடாது.
இவர்கள் துறவு வேசத்தில் சகல சுகபோகங்களையும் அனுபவித்துக்கொண்டு மக்களை துன்புறுத்தும் ஒரு கேடுகெட்ட அரசியல்வாதி ஆகையால் வெளித் தோற்றத்தை வைத்துக் கொண்டு இவர்களை பெளத்த துறவி என முடிவு செய்து விடாதீர்கள்.