இன்றைய
நிலையில் தமிழ் இணையத்தில் வளர்ந்துகொண்டிருக்கிறது. பல
வருடங்களுக்குமுன் இருந்ததைவிட இன்று வெகுவாக உயர்ந்துவருகிறது. இணையத்தில்
தமிழில் எளிதாக எழுதவும் இலவசமாக இணையம் தொடங்கவும் பல புதிய
மென்பொருட்களும் சேவைகளும் வந்துள்ளதால் தமிழ் மக்கள் பலர் தங்களுக்கென்று
ஒரு இணையதளம் தொடங்கி தமிழை வளர்க்க முயற்சிக்கின்றனர்.
பலர்
தங்கள் அனுபவங்களையோ, ஆராய்ச்சிக் கட்டுரைகளையோ வலைத்தளங்களில் இட்டு நல்ல
தமிழைப் பரப்புகின்றனர். சிலர் தங்கள் படைப்புகளான கவிதைகள் மற்றும்
சிறுகதைகள் ஆகியவைகளை தமிழ்மீது உள்ள பற்றால் எழுதி பதிவிடுகின்றனர்.
சிலர், அறிவியல் மற்றும் தெரிந்துகொள்ளவேண்டிய பயனுள்ள தகவல்களை
தருகின்றனர். மேலும் சிலர், செய்திகளை உலகிற்கு உடனுக்குடன்
தெரியப்படுத்துகிறார்கள். இன்னும் சிலர், சமூக அக்கறையுடன் சமுதாய
விழிப்புணர்வுக் கருத்துக்களைப் பகிர்கின்றார்கள்.
இவைகள்
எல்லாம் வரவேற்கப்பட வேண்டியவை. ஆனால் சிலர், தங்கள் தளம் பிரபலமடைய
வேண்டும் என்பதற்காக, “பாதி மனித உடல், மீதி பாம்பு-அதிசயப் பெண்”,
“மனிதனைக் காப்பாற்றிய பேய்”, “அந்த நடிகைக்கும், இந்த நடிகருக்கும்....”
என்றெல்லாம் தங்கள் கற்பனைக்கு ஏற்றவாறு படைப்புகளைத்
தந்துகொண்டிருக்கிறார்கள். இவையெல்லாம் தவறு என்பதை அவர்கள் உணரவேண்டும்.
எனவே இணையதளம் வைத்திருப்பவர்கள் உண்மையான தகவல்களை மட்டும் தங்கள்
தளத்தில் இடவேண்டும்.
ஆங்கிலம்
கலந்து எழுதுவது, இது தமிழுக்கு ஒரு பெரிய இழுக்கு. தமிழ் பேசுவது
குறைந்து ஆங்கிலம் பேசுவது அதிகரித்துவிட்ட இந்த காலக்கட்டத்தில் நல்ல
தமிழை பரப்ப ஒரே வழி இணையம்தான். ஆனால், அதில்கூட ஒருசிலர் தங்கள்
தளத்தில், ஆங்கிலம் கலந்து நாம் பேசுவதுபோலவே எழுதுகிறார்கள். இப்படி
எழுதுவதால், அதுதான் தமிழ் என்பதுபோன்ற தவறான கருத்து படிப்பவர்களின்
மனதில் பதிவதற்கான வாய்ப்பு இருக்கிறது.
எனவே,
நண்பர்களே! தமிழ் நிலைக்க, இணையத்தில் தூய தமிழையே பயன்படுத்த
முயற்சிப்போம். சில ஆங்கில வார்த்தைகளைத் தவிர்க்க முடியாதுதான். ஆனால்,
முயன்றவரை ஆங்கிலம் கலக்காமல் எழுத முயற்சி செய்வோம். இணையத்தில்
தமிழுக்கென்று ஒரு தனித்துவத்தை ஏற்படுத்துவோம். நாம் ஒவ்வொருவரும் நம்
அறிவுக்கேற்ப தமிழ் படைப்புகளைத் தருவோம். நம் படைப்புகள் எதுவும், தவறான செய்திகளைப் பரப்பக் கூடாது. முயன்றவரைத் தமிழிலேயே இருக்கவேண்டும்.
இவைகளை மனதில் வைத்துக்கொண்டு, இணையம் என்னும் வருங்காலத்தில் தமிழை நிலைநாட்டப் பாடுபடுவோம்.
நன்றி.