Friday 10 February 2017

தமிழக மக்கள் ஏன் இவ்வளவு அப்பாவியாக இருக்கிறார்கள்?

சசிகலாவை ஆயம்மா, வேலைக்காரி என கிண்டல் செய்வதைப் போன்ற  ஒரு  குருட்டுத்தனம் வேறு இருக்க முடியுமா? ஜெயலலிதாவே  சசிகலாவை 
தனது உடன்பிறவா சகோதரி எனக்குறிப்பிட்டதை அறியாதவர்களா? சசிகலா தனது உயிர்தோழி என தன்பக்கத்திலேயே வைதிருந்தாரே அதை  மறந்துவிட்டனரா?? இதையும்தாண்டி எந்த ஆயம்மாவாவது  சாராய ஆலை வைத்திருக்கிறாரா? எந்த வேலைக்காரி ஜாஸ் தியேட்டர் வாங்கியிருக்கிறார்?? பாத்திரம் தேய்க்கின்றவரால் பையனூர் பங்களாவை பறிக்க  முடியுமா??? இந்த  கங்கை அமரன் தனது பையனூர் பங்களாவை சசிதான் பிடிங்கினார் என பத்திரிகையாளர் சந்திப்பில் பேட்டி கொடுக்கிறாரே, ஏன் இந்த அமரன்  சம்பந்தமே இல்லாத ஜெயலலிதாவிடம் நியாயம் கேட்டிருக்க வேண்டியதுதானே? முட்யுமா? முடியாது! ஏனெனில் பிடிங்கியது  இருவருமாக சேர்ந்துதான். நாலாயிரம் கோடி தங்கம் .டிரான்சி நில ஊழல் இன்னும் எத்தனையோ   இதில் எங்கே ஜெ முதலாளியானார், சசி வேலைக்காரி ஆனார்? கொஞ்சமாவது லாஜிக் வேண்டாமா?

உண்மையில் இந்த இரு முதலாளிகளுக்கும் வேலைக்காரர்களாக இருந்தது பதவிக்காக டயர் வரை கூழைக் கும்பிடு போட்டு, காலால் இட்ட பணியை
தலையால் செய்துமுடித்த ஓ.பி.எஸ் போன்றவர்கள் தான். ஜெ செத்து இத்தனை நாட்கள் ஆனபின் அவருக்கு ஞானம் வருகிறதாம். தனது முதல்வர் பதவி பிடுங்கப்பட்டவுடன், சசிக்கு மக்களிடையே எதிர்ப்பு உள்ளது என நன்றாக தெரிந்தவுடன் இவரிடம் ஜெ ஆன்மா பேசுகிறதாம், உந்துகிறதாம், உருளுதாம், உடையுதாம்! இன்னும் தெளிவாகச் சொன்னப்போனால் தன் இரு முதலாளிகளில் பலமான முதலாளியின் இடம் காணாமல் போனவுடன் சொத்தை ஆட்டையைப் போட நினைக்கும் வேலையாளின் சுயநலன் தான் ஓ.பி.எஸ்க்கு இருக்கிறதே தவிர, அதில் கட்சி நலன், அரசு நலன், மக்கள் நலன் இருக்கிறது என நினைப்பது மகா அரசியல் அறிவீனம்.

மக்கள் எதிர்பார்க்க வேண்டியதும், கேட்க வேண்டியதும், குரல் எழுப்ப வேண்டியதும் சசியா, ஓ.பி.எஸ்சா என்பதற்காக அல்ல. இருவரும் மோதகமும், கொழுக்கட்டையும்தான்  உள்ளே உள்ளது எல்லாம் ஒன்றுதான்? கேட்க வேண்டியதும், குரல் எழுப்ப வேண்டியதும் "பொதுத்தேர்தல்" லுக்காக மட்டுமே இதுவே  தற்போதைய நெருக்கடிக்கு தீர்வாக அமையலாம் .

இளைஞர்களே தயாராகுங்கள் தமிழ்நாட்டை நல்வழி நடத்தி செல்வதற்கு...