Friday 9 January 2015

இலங்கை ஜனாதிபதித் தேர்தல் ஒரு பின்னோக்கிய பார்வை....

இன்றுடன் சிறீலங்காவின் முன்னாள் அதிபர் ஆகிவிட்ட மகிந்த ராஜபக்ஷ தனது மாளிகையில் இருந்து விடிந்தும் விடியாத பொழுதிலேயே வெளியேறிவிட்டார்… ஏன்..?மக்கள் அதிபர் மாளிகையை சூழ்ந்து விரட்டியடிக்க முன் ஓட்டம் பிடித்துள்ளார் என்கின்றன சில ஊடகங்கள்.

சிறீலங்காவில் வரலாற்றில் என்றுமே இல்லாதளவுக்கு ஓர் அதிபர் தேர்தல் இவ்வளவு மகத்தான அமைதியாக நடந்துள்ளதே ஏன்..?

தேர்தல் மோசடியில் மகிந்தவைப் போல ஒரு மன்னன் கிடையாது என்று ஜே.வி.பி தலைவர் சோமவன்ச முன்னர் ஒரு தடவை கூறியிருந்தார், அத்தகைய மன்னாதி மன்னன் அமைதியாக தேர்தல் நடத்தி அமைதியாக வெளியேறக் காரணமென்ன..?

நேற்று தேர்தல் நடக்கும் போதே அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மகிந்தவுக்கு போன் செய்து தேர்தலை குழப்ப வேண்டாம் என்று மகிந்தவை மீண்டும் எச்சரித்திருந்தார்… ஏன் அவர் மட்டும் இதில் தலையிட வேண்டும்..?

சிறீலங்காவின் தேர்தல் வரலாற்றில் என்றுமே இல்லாத அமைதியான ஆட்சி மாற்றம் நடந்ததுள்ளதே ஏன்…?

அனைத்துக் கேள்விகளுக்கும் ஒரே பதில் சர்வதேசத்தின் பிடி சிறீலங்காவின் கழுத்தை இறுக்கிவிட்டது என்பதுதான் அர்த்தம்… தமிழர்கள் இதைப் புரிய வேண்டும்.இலங்கைத் தீவு என்ற மாங்கனி பறிக்கப்பட்டுவிட்டது.. அதற்குள்தான் தமிழர்களும் இருக்கிறார்கள் என்பதை புரிய வேண்டிய தருணம் இது..

ஆசிய பிராந்தியத்திற்கான அமெரிக்காவின் நிகழ்ச்சித்திட்டம் மாறிவிட்டது, சிறீலங்காவில் மகிந்த – கோத்தபாய பாணி வெள்ளை வான் ஆட்சியும், உல்லாசப் பயணிகளாக வரும் வெளிநாட்டு பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்படுவதும் இனி சாத்தியப்படாது என்று முன்னரே செய்திகள் எச்சரித்திருந்தன.நடைபெற்றிருக்கும் நிகழ்வுகளைப் பார்த்தால் மகிந்த ராஜபக்ஷ இரண்டு ஆண்டுகள் முன்னதாகவே அதிபர் தேர்தலை நடத்தவும் அவருக்குக் கிடைத்த அழுத்தமே காரணமாக இருக்கலாம் என்ற சந்தேகமும் ஏற்படுத்துகிறது.

சிறீலங்காவில் மகிந்த ராஜபக்ஷ றெஜீமானது, சிரியாவில் ஆஸாட் றெஜீம் போல ஆட்சியில் இருந்தது, உலக நாடுகளில் றெஜீம்களுக்கு இனி இடமில்லை என்பதால் மகிந்த அகற்றப்பட்டிருக்கிறார்.

நடந்து முடிந்த தேர்தலை புரட்டிப் பார்த்தால் ஒரு நெறிமுறைப்படி மகிந்த றெஜீம் அகற்றப்பட வேண்டும் என்பதற்கு அமைவாக நிகழ்வுகள் அரங்கேறியிருப்பது தெரிகிறது. மகிந்த ராஜபக்ஷ தோற்கடிக்கப்பட வேண்டும் என்பதற்காகவே அனைத்து வியூகங்களும் அமைக்கப்பட்டிருந்தன, இதை அமைக்கும் ஆற்றலும் பகுப்பாய்வும் சிறீலங்கா எதிரணிக்குக் கிடையாது, அவர்களுக்கு ஒரு பிரச்சனையை எப்படித் தீர்ப்பதென்றே தெரியாது – இது வரலாறு.

இனி நடந்த நாடகங்களை திருப்பிப் போட்டு பார்த்தால் நடந்து முடிந்திருக்கும் விவகாரங்களின் உண்மை தெளிவாகத் தெரிய வரும். இனி சர்வதேச சமுதாயத்தால் சிறீலங்காவிற்காக எழுதப்பட்ட கதை திரைக்கதை வசனம், உரையாடல் கொண்ட பிரதியை பின்பக்கமாக வாசிக்க ஆரம்பிப்போம்.

முதலாவது தேர்தல் கூட்டங்களில் பேசும்போதெல்லாம் அமைதியான முறையில் தேர்தலுக்கு ஒத்துழையுங்கள் என்று மகிந்த ராஜபக்ஷ கேட்டுக்கொண்டிருந்தார்.. ஏன்..?

கடந்த இரண்டு தேர்தல்களிலும் அவர் இப்படிப் பேசியதே கிடையாது,அவருடைய கையாளான சண்டியன் மேர்வின் சில்வா எங்கே?அவருடைய இன்னொரு கையாளான பொது பல சேனா எங்கே..?

அவர்கள் இந்த உலகத்தில் எங்கே இருக்கிறார்கள் என்பதே தெரியாமல் அடங்கிக் கிடக்க காரணம் மகிந்தவுக்கு வல்லரசொன்று விடுத்த நெருக்குதலே.. அது இந்தியா அல்ல.இந்தியா என்ற பாத்திரம் இந்த நாடகத்தில் திரைக்குப் பின்னால் ஒழிந்திருக்கிறது.

அன்று முஸ்லீம்களின் மசூதிகளை உடைத்து, கிறீத்தவ தேவாலயங்களை தாக்கி, இந்துக் கோயில்களுக்கு தீயிட்ட புத்தபிக்குகள் தம்மை நம்பாமல் இந்தியாவில் உள்ள திருப்பதி போய் இன்னொரு மதத்தின் லட்டைத்தின்று தேர்தலுக்கு வந்த மகிந்த ராஜபக்ஷவின் பயணத்தை மதவெறி கொண்ட மசூதிகளை இடிக்கும் புத்த பிக்குகள் கண்டிக்காதது ஏன்..?

அவர்களும் அடக்கப்பட்டார்கள் ,அவர்களை இனி அடக்கி வாசிக்கும்படி கட்டளை கொடு என்று மகிந்தவுக்கு எச்சரிக்கை கிடைத்துள்ளது, இல்லாவிட்டால் அவர்கள் ஆடாத ஆட்டம் ஆடியிருப்பார்கள்.மகிந்த ராஜபக்ஷ திருப்தி லட்டுத் தின்றதும், சல்மான் கான் மகிந்தவுக்கு ஆதரவாக சிறீலங்கா போனதும் எதற்காக..?

இந்தியா மைத்திரிக்கு ஆதரவாக இருப்பதாக கருத்து வரக்கூடாது என்பதற்காகவும், இந்த விவகாரத்தில் இந்தியா நடுநிலை வகுப்பதாக காட்ட விரும்பியதாலும் ஏற்படுத்தப்பட்ட இன்னொரு காமடி ட்ராக் திரைக்கதை.

இனி கூட்டமைப்பு மைத்திரியை ஆதரித்ததும் இதன் ஓரங்கமாகவே இருப்பதை மறுக்க இயலாது,கூட்டமைப்பு பொது வேட்பாளரை ஆதரித்தால் மகிந்த என்ன கூறுவார்.. புலிகளுடன் மைத்திரி சேர்ந்துவிட்டார் என்று பிரச்சாரம் செய்வார், அவர் செய்யாவிட்டாலும் சிங்கள மக்கள் அப்படியே உணர்ந்து மகிந்தவுக்கு வாக்களித்து சர்வதேச வியூகத்தை உடைத்துவிடுவார்கள். ஆகவேதான் புலிகளுக்கு எதிராக, புலிகள் ஈவு இரக்கமற்றவர்கள் என்று சம்மந்தரை ஒரு கருத்துக் கூறும்படி சொன்னார்கள், இல்லாவிட்டால் தேர்தல் நேரம் அந்தக் கருத்து சம்மந்தருக்கு தேவையற்ற கருத்து,அது சிங்கள மக்களின் காதில் பூ வைக்க உருவாக்கப்பட்ட வசன அமைப்பு.ஆனால் அதை அப்படியே விட்டுவிட முடியாது..

சம்மந்தர் சொன்னதை கூட்டமைப்பில் யாராவது மறுத்து போர்க்கொடி தூக்காவிட்டால் சிங்கள வாக்காளர் அதை நாடகமாகக் கருதிவிடுவார்கள்.. ஆகவே எதிர்ப்பு வாசகம் கே.சிவாஜிலிங்கத்திடம் இருந்து வந்தது, பத்திரிகைகளில் பிரபலப்படுத்தப்பட்ட அந்த எதிர்ப்புக்கு கூட்மைப்பில் ஒருவருமே பதில் கூறவில்லை காரணம் அது கே.சிவாஜிலிங்கத்திற்காக எழுதப்பட்ட வாசகம்.

கூட்டமைப்பு பொது வேட்பாளரான மைத்திரியுடன் சேர்வதாக இருந்தால் தமிழ்த் தேசியம் என்ன ஆவது? அதற்கும் ஒரு பதில் இருந்தது. தேர்தலைப் பகிஷ்கரிப்போம் என்று மகாணசபை உறுப்பினரும் புலிகளின் ஆதரவாளருமான அனந்தி கூறினார், அவருடைய வீட்டுக்கு யாரோ கல்லெறிய பதிலுக்கு சிறீலங்கா பெண் போலீஸ் அனந்திக்கு பாதுகாப்பு வழங்கியது.

கூட்டமைப்பு பொது வேட்பாளரை ஆதரிப்பதால் வடக்கே தேர்தலை புலிகள் பகிஷ்கரிக்கிறார்கள் என்று சிங்கள பாமர வாக்காளர் நம்ப வைக்கப்பட்டார்கள். இதற்கு கே.சிவாஜிலிங்கமும் அனந்தியும் அவர்களுக்கு வேண்டும், கே.சிவாஜிலிங்கம் மீதோ அல்லது அனந்தி மீதோ கூட்டமைப்பு ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப் போவதாக உடனடியாக அறிவிக்காதது ஏன்..? காரணம் அவர்கள் இருவரும் வாசித்ததும் அந்த எழுதப்பட்ட பிரதியின் வரிகள்தான்.

மறுபுறம் இனப்பிரச்சனைக்கு தீர்வு காண்பது தொடர்பாக எந்த நிபந்தனையும் இல்லாமல் மைத்திரியை ஆதரிக்க வேண்டுமென்று கூறப்பட்டதை கூட்டமைப்பு தலையாட்டி ஏற்றுக் கொண்டதும் இதன் ஓரங்கமே..

மைத்திரியும் தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் இனப்பிரச்சனை பற்றி எதுவும் பேசாமல்.. தேர்தலை சந்தித்தார். அப்படியானால் மகிந்த ராஜபக்ஷவை அவர் போர்க்குற்றத்தில் மாட்டிவிடுவாரா? எல்லா மர்மமும் முடிச்சாக இருப்பது அங்குதான்… அதற்கான வசனங்களையும் மைத்திரி நன்கு பாடமாக்கிக் கூறினார், இந்த நாடகப் பிரதியை மனமுவந்து ஏற்ற இந்தியாவை குளிரப்பண்ண அது அவருக்கு அவசியமாக இருந்தது.

இராணுவத்தை வடக்கில் இருந்து எடுக்க மாட்டேன்,மகிந்த ராஜபக்ஷவை போர்க்குற்றத்தில் இருந்து காப்பாற்றுவேன் என்று முழங்கினார், கோத்தபாயவுக்கு எழுதிய வசனம் இப்போது அவருக்கு சொந்தமாகியிருந்தது.

நடப்பது எல்லாமே முற்று முழுதாக எழுதப்பட்ட ஒரு சங்கீத நாடகம் போல ஒலித்தது, அதுதான் சிறிPலங்கா தேர்தலின் போது தலை கால் தெரியாமல் உறைந்து கிடக்கக் காரணம். முன்னரே தேர்தலை அறிவித்து, குழப்பம் விழைவிக்காமல் தேர்தலை நடத்தி தோற்றால் உடனடியாக வெளியேற வேண்டும்.அப்படி வெளியேறினால் மகிந்த போர்க்குற்றத்தில் இருந்து காப்பாற்றப்பட வாய்ப்புள்ளது என்பதும் இந்த சர்வதேச கீதையின் வரிகளுக்குள் வருகிறது என்பதுதான் அடுத்த சுவாரஸ்யம்.

ஆனால் இதில் இன்னொரு வேடிக்கையும் உள்ளது…

தன்னுடைய வசனத்தை வெல்லப் போகும் மைத்திரிபால கூறிவிட்டதால் கோத்தபாய ராஜபக்ஷ கூறிய கருத்து சிறிது வேறுபாடாக இருந்தது.. ஏன் தமிழர் கூட்டமைப்பு மகிந்த ராஜபக்ஷவுக்கு இன்னொரு சந்தர்ப்பம் கொடுக்கக்கூடாது இனப்பிரச்சனை தீர்வுக்காக என்று கேட்டிருந்தார்.

வன்னியில் போர் நடந்தபோது கடைசி நேரம் யுத்த நிறுத்தம் கோரப்பட்டபோது அவர் சிரித்த எகத்தாள சிரிப்பும், போர் முடிந்துவிட்டது எதற்கு யுத்த நிறுத்தம் என்று கேட்ட கேள்வியும்…கும்மாளமும் முற்றாகவே மாறி பல்லில்லா பாம்பாக கூட்மைப்பிடம் கையேந்தியிருந்தார்.

ஆனால் இதில் இன்னொரு வேடிக்கை இருக்கிறது,மகிந்த ராஜபக்ஷவை காப்பாற்றுவதாகக் கூறிய மைத்திரிபால சிறீசேனா.. கோத்தபாயவை காப்பாற்றப் போவதாக சொல்லவில்லை..

நேற்று முன்தினம் அமெரிக்கக் குடியுரிமை உள்ள கோத்தபாய அமெரிக்க சட்டப்படி அமெரிக்காவில் தண்டிக்கப்படலாம் என்று அமெரிக்கப்பத்திரிகையொன்று எழுதியிருந்தது. எனவே கடைசி நேர யுத்தத்தில் மகிந்தவின் கட்டளைகளுக்கோ, அல்லது சர்வதேசத்தின் கட்டளைகளுக்கோ அடி பணியாமல் தன்னிச்சையாக கோத்தபாய போரை நடத்தியமையே அனைத்துக்கும் காரணமென கதைக்கு முற்றுப்புள்ளி விழ வாய்ப்புள்ளது.

அடுத்த வியூகம் இன்னமும் சுவாரஸ்யமானது..

மக்கள் மறதி மிக்கவர்கள்… ஆகவே ஒவ்வொரு அமைச்சராக வாராவாரம் மகிந்தவை விட்டு வெளியேறும்படியாக வியூகம் வகுக்கப்பட்டது,கடைசியில் முஸ்லீம்காங்கிரஸ், கூட்மைப்பு என்று துருப்புச் சீட்டுக்களை ஒவ்வொன்றாக விழுத்தி மகிந்தவின் கடதாசிக்கூட்டம் சரிவது போன்ற காட்சி ஏற்படுத்தப்பட்டது.

இதையெல்லாம் பார்த்தும் இதுபற்றி எதுவும் சொல்லாமல் இருந்தார் மகிந்த, சிங்கள இராணுவ உளவுப்பிரிவும் இவர்களுக்கு எதிராக திரும்பாது உறைந்து கிடந்தது.இந்தியா ஏமாற்றிவிட்டது, அமெரிக்கா ஏமாற்றிவிட்டது, புலிகளுக்கு உதவுகிறார்கள் என்று மாதத்திற்கு ஒரு தடவை கூச்சலிடும் சிங்கள இனவாதப் பேராசிரியர் அமரதாச குணதாசவும் ஊமையாகக் கிடந்தார்.

எல்லோருமே ஊமையாகக் கிடந்து மகாவம்சத்தின் கடைசிக் கதாநாயகன் நவ யுக துட்டகைமுனுவை விடிந்தும் விடியாத பொழுதில் வீடனுப்பி வைத்தது ஏன்..?

இந்த நாடகத்தில் இவர்கள் அனைவரும் பணம் கொடுத்து உருவேற்றப்படும் வெற்றுப் பாத்திரங்கள் மட்டுமே, அவர்களால் ஊமைகளாகவும் நடிக்க முடியும்.அப்படியானால் கருணா, பிள்ளையான், கே.பி, டக்ளஸ் போன்றவர்களின் எதிர்காலம் என்ன..?

இவர்கள் அனைவரும் முன்னர் புலிகளுக்காக எழுதப்பட்ட சர்வதேச கீதையின் பாகம் ஒன்றின் பாத்திரங்கள்.. பாகம் இரண்டிற்குள்தான் இவர்களுடைய தலைவிதி இருக்கிறது.

சிங்களவரை போர்க்குற்றவாளியாக்க முன்னர் தமிழர்களைத்தான் போர்க்குற்றவாளிகள் ஆக்குவார்கள்..

இனி புலம் பெயர் தமிழர் சிந்திக்க வேண்டியது என்ன..?

பட்டாசு வெடித்து கொண்டாடுவோமா.. இல்லை லட்டு கொடுப்போமா.. இல்லை யார் வந்தாலும் தமிழர் பிரச்சனை தீராதென அலுத்துக் கொள்வோமா..?

இப்போது தமிழர் பிரச்சனைக்கு தீர்வுகாண்பதை எதிர்ப்பதற்கு ஓர் எதிரணி கிடையாது, மகிந்த ராஜபக்ஷவின் சிறீலங்கா சுதந்திரக்கட்சி கடைசிக் கட்டத்தில் நிற்கிறது, அவர்களும் இனப்பிரச்சனை தீர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கமாட்டோம் என்றுள்ளார்கள்.

தீர்வுக்கு தடையில்லை பிள்ளையார் பிடிக்க காகம் வந்தது போல ஏதோ ஒரு தீர்வு வரும்.. ஆனால் அது மட்டுப்படுத்தப்பட்டதாகவே இருக்கும்… காரணம் என்ன..?

அன்று புலிகளுக்கு எதிராக வகுக்கப்பட்ட வியூகத்திற்கு அனுமதியளித்த இந்தியா இப்போது எழுதப்பட்ட வியூகத்திற்கும் துணையாக நிற்கிறது, மைத்திரிக்கு நரேந்திரமோடி கூறியிருக்கும் வாழ்த்து இதற்கு நல்ல எடுத்துக்காட்டு.

இந்த முடிவுகுறித்து பா.ஜ.க தமிழக தலைவர் தமிழிசை மகிந்த சரியான பாடம் படித்துள்ளார் என்று கூறியுள்ளார், காங்கிரஸ்கூட வாய் திறக்கவில்லை.

எனவே இந்தியா விரும்பிய, இந்திய மாநிலங்களுக்கு குறைவான ஒரு தீர்வை நோக்கி நகர மட்டுமே முடியும் என்றளவிலேயே அனைத்தும் நடக்கப்போவது தெரிகிறது.

இதற்கு மேல் போனால் மறுபடியும் சிங்களக் கட்சிகள் பிளவுபடும்.. என்று கூறப்பட்டு அமைதி காணப்படும்..

இந்த வியூகத்தில் புலம் பெயர் தமிழர் எதுவும் செய்ய முடியாது..

அப்படி ஏதாவது செய்தால் அவர்களுக்காக எழுதப்பட்டுள்ள சர்வதேசக் கீதை மூன்றாம் பாகத்தை கையில் எடுப்பார்கள்.

இன்னமும் புலிகள் மீதான தடையை அவர்கள் நீடிப்பு செய்ய இதுவும் ஒரு காரணம்.

இந்தச் சர்வதே இரும்புச் சக்கரத்தின் திசையை மாற்றுவது கடினம்..

இன்றைய தென்னாசிய அரசியலில் எந்த ஒரு பாத்திரமும் இந்தச் சக்கரத்திற்கு வெளியால் இல்லை என்பதுதான் அதிசமான உண்மையாக இருக்கிறது.

இதற்கு நரேந்திர மோடியைவிட அழகான உதாரணம் கிடையாது..

ஆட்சிக்கு வந்த 100 தினங்களில் புதிய மாற்றங்களை செய்வேன், அனைத்து மந்திரிகளும் தமது முதல் 100 தினங்களுக்கான வேலைத்திட்டங்களுடன் வாருங்கள் என்றார்.

இன்றோடு அவர் பதவி ஏற்று 216 நாட்கள் ஆகிவிட்டன, அந்த நூறுநாள் கதையை அவர் மறந்து 119 நாட்களாகிவிட்டன.

இப்போது மைத்திரிபால சேனாநாயக்காவும் 100 தினங்களில் மாற்றத்தை செய்கிறேன் என்று ஆட்சிக்கு வந்துள்ளார்.

மோடியின் நூறு நாள் கதையை எழுதியவர்களே இவருடைய நூறு நாள் கதையையும் எழுதியிருக்கலாம்.. இரண்டுமே ஒற்றுமையாக உள்ளன.

மோடி அரசு மேலை நாடுகளுக்கு வாய்ப்பான அரசாக மாறியுள்ளது அதனுடைய இந்திய நிலவுடமைக்கான புதிய சட்டம் இதற்கு ஓர் உதாரணம்.

இதே கதைதான் மைத்திரியின் முதல் நூறு நாளிலும் நடக்க வாய்ப்புள்ளது.

இந்தியா நூறு என்றால் இலங்கையும் நூறு … நூற்றுக்கு நூறு எவ்வளவு அழகாகப் பொருந்துகிறது.

இந்தத் திரைக்கதையை எழுதியவர்கள் மிகவும் திறமைசாலிகள்.. ஆனால் எல்லாத் திறமைசாலியும் ஒரு இடத்தில் சறுக்குவான்.. இந்த நூற்றுக்கு நூறுதான் அவர்கள் சறுக்கிய இடம்.

அடுத்து வரும் சறுக்கல்கள் எல்லாம் இதிலிருந்துதான் ஆரம்பிக்கும்… இதை புலம் பெயர் தமிழர் புரிந்து நடக்க வேண்டும்..

நீரோட்டம் படகின் திசையை மாற்றும்… ஆனால் படகால் நீரோட்டத்தின் திசையை மாற்ற முடியாது… இதுதான் உலக அரசியல்..

மகிந்தவுக்காக குரல் கொடுத்த அவருடைய உயிர் நண்பர் சுப்பிரமணியசுவாமியும் தனது நண்பனுக்கு இப்படியொரு அவலம் வந்துவிட்டதே என்று குரல் கொடுத்தாரா.. அவரும் கம்மென்று இருக்கிறார்.. ஏன்..?

உலகம் முழுவதையும் ஒட்டுக் கேட்ட அமெரிக்க என்.எஸ்.ஏ உளவுப்பிரிவு தென்னாசிய தலைவர்கள் அனைவருடைய உரையாடல்களையும் பதிவு செய்யாமல் இருந்திருக்குமா..?

போர்க்குற்றத்திற்கான அனைத்து ஆதாரங்களும் அவர்களிடம் இருக்கும்.. தென்னசிய பிராந்திய மேலாண்மைக்கு எது தேவையோ… தேவைக்கு ஏற்ப பயன்படுத்துவார்கள்..

ஆம்…இது நீரோடு செல்கின்ற ஓடம்… இதில் நியாயங்கள் யார் சொல்லக்கூடும்… என்பது ஒரு தமிழ் திரைப்படப்பாடல்..

சர்வதேச விவகாரத்தில் இதுதான் ஒரே நியதி..ஆனால் அதே பாடலில் இன்னொரு வரி இருக்கிறது.. சட்டம் ஏமார்ந்து போனாலும் போகும் தர்மம் எப்போதும் பழி வாங்கித் தீரும் என்று வரும்..

21ம் நூற்றாண்டின் துட்டகைமுனுவான மகிந்த ராஜபக்ஷவையும் தர்மம் இப்படியொரு பொறிக்குள் விரைவாக வீழ்த்தியுள்ளது.

மகாவம்ச பிக்குகள் கூட இப்பொழுது வாயடைத்து நிற்கிறார்கள்.

புலம் பெயர் தமிழர் இவை அனைத்தையும் தராசில் போட்டு நிதானமாக நடக்க வேண்டும் உணர்ச்சி அரசியல் பேச்சுக்களில் மிக எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும்.

ஏனென்றால் இது நீரோடு செல்கின்ற ஓடம்… இதில் நியாயங்கள் யார் சொல்லக்கூடும்…என்ற நிலையில் இனியும் தமிழினத்தை சிக்குப்பட வைத்தல் கூடாது.

டென்மார்க் -இ.சே.துரை