Sunday, 26 February 2017

UN மேலதிகமாக கால அவகாசம் வழங்கக் கூடாது, இலங்கை சர்வதேசத்தை ஏமாற்றுகிறது.

2015ம் ஆண்டு ஜனவரி மாதம் எட்டாம் திகதி புதிய ஜனாதிபதியாக மைத்ரிபால சிறிசேன ஆட்சி ஏறியதன்  பின்னர் நடைபெற்ற மனித உரிமைகள் கூட்டத்தொடரில் இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து கலப்பு முறையிலான விசாரணை செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தி அமெரிக்கா பிரேரணை கொண்டு வந்திருந்தது. இப்பிரேரணையானது   இலங்கை அரசாங்கத்தின் அனுசரணையுடன் நிறைவேறியிருந்தது. மேலும் புதிய அரசியல் அமைப்பின் ஊடாக தேசிய பிரச்சினைகளுக்கு தீர்வு எட்டப்பட்டு அனைவரும் ஒற்றுமையுடன், இலங்கையர்கள் என்ற வகையில் சமாதானமாக வாழும் நிலை ஏற்படுத்தப்படும் என சர்வதேசத்திற்கு வாக்குறுதியும்  வழங்கப்பட்டது. எனினும் வாக்குறுதி வழங்கப்பட்டு 18 மாதங்கள் கடந்த நிலையில் அப்பரிந்துரைகள் அடங்கிய தீர்மானத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு மேலும் கால அவகாசம் தேவையாகவுள்ளது என்ற கோரிக்கையை நிறைவேற்றிக் கொள்வதற்காக அரசாங்கம் பலமுனைகளில் நடவடிக்கை எடுத்து வருகின்றது.


ஐ.நா.மனித உரிமை பேரவையினால் வழங்கப்பட்ட பரிந்துரைகளை இலங்கை அரசாங்கம் முறையாக நடைமுறைப்படுத்தினால் மட்டுமே தமிழ் மக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும்.

சர்வதே குற்றவியல் நீதிமன்றம், ஐ.நா மனித உரிமைகள் பேரவை உள்ளிட்ட சர்வதேச அமைப்புக்களின் கரிசனை தமிழ் மக்களின் பாதுகாப்புக்கு மிகவும் அவசியமாகும். இலங்கை அரசாங்கம் இதுவரையிலும் தமிழ் மக்களின் உரிமைக்காக காத்திரமான எந்த விடயங்களையும் செய்யவில்லை இந்தநிலையில்  காலநீடிப்பு வழங்குவது தமிழ் மக்களின் பாதுகாப்பை மேலும் கேள்விக்குறியாக்கிவிடும். இக் கால நீடிப்பின் நோக்கம் போர்குற்றங்களை மறக்கச்செய்யும் ஒரு தந்திரோபாயம் என்றே கருதவேண்டும்.

இதுவரைகாலமும் வழங்கப்பட்ட அவகாசத்தில் எவ்வித முன்னேற்றகரமான விடயங்களும் மேற்கொள்ளப்படவில்லை. இதன்மூலம் இலங்கை அரசாங்கத்திடம் முறையான அரசியல் திட்டம்  இல்லை என்பதுடம் தமிழ் மக்களை மீண்டும், மீண்டும் ஏமாற்றவே முயற்சிக்கிறது என்பது தெளிவாகிறது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட அரசாங்கத்தின் முக்கிய தரப்பினர்கள் பலரும் ஐக்கிய நாடுகளினால் பரிந்துரைக்கப்பட்ட விடயங்களை நடைமுறைப்படுத்த முடியாதெனவும், இந்த பரிந்துரைகளை ஏற்க மாட்டோம் எனவும், தாம் ஒருபோதும் தமிழருக்கு எதிரான போரில் ஈடுபட்ட எவரையும் காட்டிக்கொடுக்க மாட்டோம் என பொதுமக்கள் மத்தியில் பகிரங்கமாக தெரிவித்திருந்தனர்.

இந்தநிலையில், எத்தனை காலநீடிப்பு இலங்கைக்கு வழங்கினாலும் தமிழ் மக்களுக்கு எந்தவித முன்னேற்றமும் ஏற்படப்போவதில்லை, மாறாக மேலதிகமாக கால அவகாசம் தமிழ் மக்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்கள் தொடர ஊக்கம் அழிப்பதாக அமைந்துவிடும். போர் முடிந்து எட்டு வருடங்ள் ஆகியும் இன்றும் தமிழ் மக்கள் பல்லாயிரம் மக்களை கொன்று, பாலியல் வன்முறையில் ஈடுபட்ட வெறி பிடித்த சிங்கள ராணுவத்தின் மத்தியில் அச்சத்துடன் வாழ்கின்றனர். காணமல் போதல்,கப்பம் பெறுதல், பெண்களுக்கு எதிரான வன்முறைகள் இன்றும் தொடர்கிறது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 34வது கூட்டத்தொடர் நாளை  திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளது.