Saturday, 12 November 2016

இனவாதத்தை கக்கும் விகாராதிபதி All Tamils ​​are Tigers,Racism Priest

நல்லாட்சி  நடைபெறுகிறது என சர்வதேச மட்டத்தில் இலங்கை நற்பெயரை பெற்றுக் கொள்ள மட்டும் முயன்றால் போதாது, அது நடைமுறையில் சாத்தியப்படவேண்டும், அப்போதே நாடும் சரி மக்களும் சரி நிம்மதி பெற முடியும் என்பது மறுக்க முடியாத உண்மை.

மதக் கருத்துகளை போதிக்க வேண்டிய,அமைதி வழியை பின்பற்ற வேண்டிய  மதப்போதகர்களே  கடும் போக்காளர்களாக  மாறினால் அவரை பின் தொடரும் மக்கள் எவ்வாறான போக்கை கொண்டிருப்பார் என்பது எவருக்கும் சொல்லித் தெரியவேண்டியது இல்லை.

நேற்றைய தினம்  ஓர் பௌத்த பிக்கு நூற்றுக்கணக்கானவர்கள் சுற்றி நின்று வேடிக்கை பார்க்க, அவர் தமிழர்கள் மீதும், மக்கள் மத்தியில் மதிக்கத்தக்க அரசாங்க பதவியை வகிக்கும் கிராம சேவையாளர் ஒருவர் மீதும் பிரயோகித்த வார்த்தைகள் மிகவும் கீழ்த்தரமாக அமைந்தன. நீதிமன்றத்திற்கு முன்னிலையில் பிக்குவின் வாயில் இருந்து வந்த கீழ்த்தரமான, இனவாத வார்த்தை பிரயோகங்கள்  ஒழுக்க விதிமுறைகளை கட்டுப்படுத்த வேண்டிய பொலிஸாரினாலும்  வேடிக்கை பார்க்கப்பட்டதே தவிர  கட்டுப்படுத்தப்பட வில்லை என்பது மிகவும் மனவருத்தம் தரக்கூடியது. மேலும்  இவ்வாறு பொது மக்களின் முன்னிலையில் அவ்வுத்தியோகத்தர் அவமானப்படுத்தப்பட்டதற்கும், அதனை மற்றவர் வேடிக்கை பார்க்கும் நிலைக்கும்  முக்கிய காரணம் அவர் தமிழர் என்பதேயாகும் .

கடுமையான சட்டங்கள் மூலம் இனவாதம் முற்றாக நாட்டை விட்டு விரட்டப்பட்டு, விஷக்கிருமிகளை நசுக்கபடாவிட்டால், அரசு அபிவிருத்தியும் நல்லிணக்கமும் நிறைந்த நாடு என சர்வதேசத்திற்கு நிறுவுவது மட்டும் எட்டாக்கனியாகவே அமையும்.  ஆட்சி மாற்றம், வாக்குறுதிகள் மட்டும் கொடுத்துக்கொண்டு வரப்படுமாயின், எத்தனை ஆட்சியும் தலைமைகளும் வந்தாலும் ஒற்றுமை என்பது இலங்கையை பொறுத்த வரை சாத்தியமில்லாததொன்றே.
ஒரு தரப்பை தூண்டிவிட்டு மற்றுமோர் தரப்பிற்கு எச்சரிக்கைகளையும், கட்டளைகளையும் பிறப்பித்து வரும்போது பாதிக்கப்படுவது ஒரு இனம் அல்ல  முழு நாடும் என்பதே நிச்சயம்.

நேற்றைய  தினம்11ம் திகதி
சட்டவிரோத காணி அபகரிப்பைத் தடுக்கச்சென்ற பட்டிப்பளை பிரதேச செயலக குழுவினரை மிக்க கடுமையான இனவாத வார்த்தைகளால் திட்டியுள்ள மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமன ரத்தின தேரர் தமிழர்கள் அனைவரையும் கடுமையாக எச்சரித்து திட்டிய வார்த்தைகள்.