மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி ஆனதால் தமிழர் பிரச்சினைகளுக்கு தீர்வு வந்து விட்டதாக அதி புத்திசாலித்தனமாக எண்னும் தமிழர் ஆசிரியர் சங்கம் இந்தியாவின் அரசியல்வாதி விடுதலைச்சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கூற்றில் பிழை கண்டு அதனை எதிர்த்து அறிக்கை ஒன்றினை விடுத்துள்ளது.
அந்த அறிக்கை வருமாறு:- காலம் காலமாக இலங்கையில் உள்ள இலங்கைத் தமிழர்கள் படுகின்ற துன்பங்களும், துயரங்களும் எண்ணிலடங்காதவை.இந்தியாவின் தமிழ்நாட்டில் வாழுகின்ற தமிழ்பேசும் ஒருசில தலைவர்கள் இத்துன்பங்களை தமக்குச் சாதமாகப் பயன்படுத்தி அரசியல் இலாபம் தேடுவது சாதாரணமான விடயமாக இருந்தாலும், தற்போது இலங்கையில் நடைபெற்று முடிவடைந்த ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேன தெரிவுசெய்யப்பட்டுள்ளமை தமிழர்களின் மனங்களில் ஓரளவுக்கு நிம்மதியை ஏற்படுத்தியுள்ள தருணத்தில் தமது உசுப்பேத்தும் பாணியை தமிழகத் தலைவர்களுள் ஒருவரான தொல்திருமாவளவன் தொடங்கியிருப்பது வேதனை தருகின்ற விடயமாகும்.
ஆட்சிமாற்றத்தை விரும்பிய தமிழ் மக்கள் மைத்திரிக்கு வாக்களித்தனர். அதனால் அவர் தமிழர்களின் பெரும்பான்மை வாக்குகளால் வெற்றி பெற்றார். இதனை ‘‘ராஜபக்ஸவும் மைத்திரியும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்” என்று தொல்திருமாவளவன் கூறியிருப்பது. தற்போது தோன்றியுள்ள தமிழர் மீதான அனுதாபத்தையும் அழித்து விடும்.உங்கள் அரசிலுக்காக இலங்கைவாழ் தமிழ் மக்களை பலிக்கடாக்களாக்குவதையும், ஊசுப்பேத்திவிடுவதையும் நிறுத்திக் கொள்ளுங்கள்.
நீங்கள் கூறுகின்ற வார்த்தைகள் உலக அரங்கில் மாற்றங்கள் எதனையும் கொண்டு வரப்போவதில்லை. இதுவரை அவ்வாறான மாற்றங்கள் நிகழ்ந்ததாகவும் இல்லை.மக்கள் அழிந்தபோது நீங்கள் எங்கே இருந்தீர்கள் என்ற வினாவை ஒருமுறை உங்களிடமே கேட்டுப்பாருங்கள். மாறாக இங்குள்ள தமிழ் மக்களாகிய நாம் படுகின்ற துன்பங்களும், சுமைகளும் உங்களுக்கு பஞ்சுமெத்தைகளைத் தருகின்றன.இனிமேலும் இதுபோன்ற கருத்துக்களை முன்வைத்தால் உலகளாவிய ரீதியில் உள்ள ஆசிரியர்களுக்கூடாக உங்களைக் கண்டிக்க வேண்டியிருக்கும்.என இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் தமது அறிக்கையில் தெரியப்படுத்தியுள்ளது.